தமிழகத்திலேயே அதிகப்படியாக பெய்த மழை: சாலைத் துண்டிப்பு, குளம் தூர் வாரும் பணியில் மூழ்கிய ஜேசிபி இயந்திரம்
திருக்கோவிலூர் அடுத்துள்ள மனம்பூண்டி பகுதியில் தமிழகத்திலேயே அதிகபடியாக 273 மிமி மழை பெய்தது. புதன்கிழமை இரவு 10:00 மணி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட மனம்பூண்டியில் 273, முகையூரில் 203 மிமீ மழையும் பதிவாகி தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட காடகனூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 10.40 லட்சம் மதிப்பீட்டில் குலம் தூர் வாரும் பணி கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில், இரவு பெய்த கனமழையில் 16 அடி ஆழம் உள்ள குளம் முழுவதும் நீர் நிரம்பி அதில் தூர்வாரும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 லட்சம் மதிப்புள்ள ஹிட்டாச்சி வாகனம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது.
அதே போல் முகையூர் பகுதியில் 203 மிமீ மழை பெய்ததன் காரணமாக முகையூர் அருகே உள்ள ஒடுவன்குப்பம் பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியதை அடுத்து நள்ளிரவு ஏரியின் கோடி வாய்க்கால் வழியாக தண்ணீர் வெளியானது.
அவ்வாறு வெளியான தண்ணீர் ஒடுவன்குப்பம் – கண்டாச்சிபுரம் சாலையில் சென்றபோது அங்கிருந்த 20 ஆண்டுகள் பழமையான சிறிய பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக கண்டாச்சிபுரம் முதல் ஒடுவன் குப்பம் சாலை வழியாக மேல் வாலை கிராமத்திற்கு செல்லமுடியாத சூழல் நிலவி வருகிறது.
ஒடுவன்குப்பம், மேல்வாலை பகுதியில் இருந்து தினசரி பள்ளி அலுவலகம் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் கிராம மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். இந்த சாலை துண்டிக்கப்பட்டதால் 5 கிலோ மீட்டர் அளவிற்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த நிலையில் சாலை துண்டிக்கப்பட்ட தகவல் அறிந்த முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து உடனடியாக சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.