திருக்கோவிலூரில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பிரதான நான்கு சாலை சந்திப்பின் அருகில் திரௌபதி அம்மன் கோயில் இருந்து வருகிறது.இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடை உரிமையாளர்களுக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகின்றது.
எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத கடைகளை தாமாக முன்வந்து இன்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகத்தினர் திருக்கோவிலூர் போலிசார் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடை உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடமும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளிடமும் திருக்கோவிலூரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் சிறு, குறு தொழில் செய்யும் எங்களைப் போன்ற நபர்கள் மீது நகராட்சி நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் இவ்வாறு நடந்து கொள்வது நியாயமா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.