கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கள்ளிப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் கடந்த 4ஆம் தேதி வீட்டிலிருந்து கரும்பு வெட்டும் தொழிலுக்கு சென்றுள்ளார். அவரது மனைவி கூலி வேலைக்குச் செல்ல குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டது.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் பின்பக்க கதவின் உடைத்து உள்ளே வந்து பீரோவில் இருந்த 26.5 சவரன் தங்க நகை, 232 கிராம் வெள்ளி கொலுசு, 2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். பின்னர், மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்த மணிவாசகம் பின்பக்க கதவு திறந்தும்; பீரோ உடைக்கப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து, சம்பவம் குறித்து மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடத்தில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் மேற்பார்வையில், குற்றவாளியை பிடிக்க திருக்கோவிலூர் ஆய்வாளர் பாலாஜி மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட எட்டு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கள்ளிப்பாடி கிராமத்தில் நடந்தது போல கொள்ளை சம்பவம் தர்மபுரி மாவட்டத்திலும் அரூர் பகுதியிலும் அரங்கேறி இருப்பது தனிப்படை போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனை அடுத்து, தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, இந்த சம்பவம் குறித்து ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைத்து அரூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்ததும், கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அரூர் தனிப்படை போலீசார் உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீஸ்சாரும் இணைந்து பிரபல பகல் கொள்ளையன் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அரூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற கைரேகையும் கள்ளிப்பாடி கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற கைரேகையும் ஒன்றாக இருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
அதேபோல் அரூரில் கொள்ளை சம்பவம் நடைபெறும் போது கிடைக்கப்பட்ட செல்போன் எண்களை வைத்து விசாரணை செய்த போது அதில் சந்தேகத்திற்கு இடமான செல்போன் எண்ணானது கள்ளிப்பாடி கிராமத்தின் அருகே உள்ள மணலூர்பேட்டையிலும் சம்பவம் நடந்த அன்று காலை இருந்துள்ளதை தனிப்படை போலீசார் துப்புத் துலக்கினர்.
இதனை அடுத்து, குற்றவாளியை கண்டுபிடித்த போலீசார் அவன் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி இரண்டு மாவட்ட தனிப்படை போலீசார் ஒரே குற்றவாளியை தேடி வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில், அரூர் தனிப்படை போலீசாரிடம் குற்றவாளி சிக்கியுள்ளான். இதனை அடுத்து, அரூர் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீசார் சிறையில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பவரை கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து வந்து விசாரணை செய்தபோது, முதலில் குற்றத்தை மறைத்த தினகரன் பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்ட போது கள்ளிப்பாடி கிராமத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளான்.
மேலும், கொள்ளை அடித்த 26.5 சவரன் தங்க நகைகள், 232 கிராம் வெள்ளி கொலுசுகள், 2 லட்சம் பணம் ஆகியவற்றை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள தனது வீட்டின் மாடியில் மண் பானையில் ஒளித்து வைத்திருபதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீசாரிடம் கூறியுள்ளான். இதனை அடுத்து, குற்றவாளியை அழைத்துக்கொண்டு அவரது சொந்த ஊருக்கு சென்று கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தனிப்படை போலீசார் மீட்டனர்.
இரண்டு மாவட்டத்தில் தொடர்ந்து பகலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல பகல் கொள்ளையன் தினகரனை கைது செய்த தனிப்படை போலீசாரை திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் இனிப்புகள் வழங்கி பாராட்டினார். இரண்டு மாவட்டங்களிலும் பட்ட பகலில் கொல்லை சம்பவத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்த பகல் கொள்ளையன் தினகரன் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.