இந்திய கடற்படைக்காக கொச்சின் கப்பல் தளத்தால் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் மிகவும் சவாலான போர் கப்பலான விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் தனது முதல் கடல் பரிசோதனைக்கு புறப்பட்டது குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பாராட்டு தெரிவித்தார். விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே கட்டமைப்பது மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்ட அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முன்னெடுப்புகளின் உண்மையான பிரதிபலிப்பாக இது விளங்குவதாக கூறினார். நாட்டை பெருமைப்படுத்தியதற்காக இந்திய கடற்படை மற்றும் கொச்சின் கப்பல் தளத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். நாட்டின் மிகப்பெரிய போர் கப்பலான இந்த விமானம் தாங்கி கப்பல் 40,000 டன் எடை கொண்டதாகும். உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 21,500 டன்கள் சிறப்பு ரக எஃகு, இந்திய போர் கப்பல்களிலேயே முதல்முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோமீட்டர்கள் நீள கேபிள்கள், 120 கிலோமீட்டர்கள் நீள பைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலமும், 2300 அறைகள் இதில் இருப்பதன் மூலமும் இதன் பிரமாண்டத்தை அறிந்து கொள்ளலாம். ஒரு சிறிய மிதக்கும் நகரமாக காட்சியளிக்கும் இக்கப்பலில், இரு கால்பந்து மைதானங்களின் அளவுக்கு விமானங்களை நிறுத்தும் இடம் இருக்கிறது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்துடன் இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.