தமிழகத்தில் உள்ள வெல்லிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் 77வது பயிற்சியை நிறைவு செய்த, பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 4, 2021) உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது பாதுகாப்பு படைகள், நமது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது என்றார். அயராத முயற்சிகள் மற்றும் சிறந்த தியாகத்தால், பாதுகாப்பு படையினர் நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். போர் மற்றும் அமைதிக் காலத்தில், அவர்கள் நாட்டுக்கு மதிப்பற்ற சேவைகளை வழங்கியுள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு சாவல்களை சந்திக்கும்போதும் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களிலும், அவர்கள் தங்கள் கடமைகளை அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுடன் செய்துள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்றை குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் கூறுகையில், சமீபத்திய காலம் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் மிகவும் சிரமமாக இருந்து வருகிறது என்றார். இந்த பெருந்தொற்று, அனைத்து தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையிலும், கொவிட்-19 பெருந்தொற்றை சமாளிப்பதிலும், நமது பாதுகாப்புடையினரின் மிகச் சிறந்த உறுதியை அவர் பாராட்டினார். கொவிட் சவால்களை எதிர்கொண்டதில், பாதுகாப்பு படையினரில் பெரும்பாலானோர், முன்கள பணியாளர்களாக இருந்தனர். அவர்களின் உறுதி மற்றும் பங்களிப்பை நாடு போற்றுகிறது. மாற்றங்களுடன் கூடிய சவாலான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என குடியரத் தலைவர் கூறினார். தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படைகள் பற்றி கருத்துக்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. புவி-யுக்தி மற்றும் புவி- அரசியல் கட்டாயங்கள் மற்றும் பல காரணிகள் பாதுகாப்பு நிலவரத்தை அதிக சிக்கலாக்கியுள்ளது. அதனால், பயிற்சியின் போது, பயிற்சி அதிகாரிகளுக்கு, மாறும் சூழலை புரிந்துகொள்ள உதவும் வகையில் விரிவான தகவல்களை அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அப்போதுதான் அவர்களால், நிலவரத்தை புரிந்து கொண்டு, நாட்டின் பாதுகாப்பு விஷயங்களின் அவர்களின் பங்கை பயிற்சி அதிகாரிகளால் அடையாளம் காண முடியும் என அவர் கூறினார். 21ம் நூற்றாண்டு சமூகம் அறிவார்ந்த சமூகமாக உள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். இந்த நூற்றாண்டில் அறிவு உண்மையிலேயே சக்தி வாய்ந்ததாக உள்ளது. அறிவு பொருளாதார யுகத்தில் நாம் இருக்கிறோம் என கூறப்படுவதுபோல், நாம் அறிவு போர் யுகத்திலும் இருக்கிறோம். பாதுகாப்பு பணியாளராக, ராணுவ அதிகாரிகள், அறிவார்ந்த வீரர்களாக இருக்க வேண்டும். ராணுவ பயிற்சி கல்லூரியில், அதிகாரிகள் கற்றது, தேவையான திறன்களை ஊக்குவிக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த பயிற்சி, எதிர்காலத்தில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகளை தயார்படுத்தும். சிறந்த தொழில்நுட்பங்கள், நவீன யுக்திகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கற்பது, பயிற்சி அதிகாரிகளை சிறந்த வல்லுனர்களாக்கும் என குடியரசுத் தலைவர் கூறினார்.